Monday, October 25, 2010

ஆடம்பர மோகத்தால் மதுரை கூலிப்படையாக உருவாகிறது


கூடா நட்பு, வேலையின்மை, ஆடம்பர மோகத்தால் 25 வயதிற்குட்பட்டவர்கள் மதுரையில் கூலிப்படைகளாக உருவெடுத்துள்ளனர். உள்ளூர் போலீசிற்கு பயந்து வெளியூர்களில் "தொழில்' செய்கின்றனர்.

மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன், ரவுடிகள் சிலர் தங்களுக்கு கீழ் ஆட்களை நியமித்து கட்டப்பஞ்சாயத்து செய்தனர். "யார் பெரியவர்' என்ற பிரச்னையால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு அடிக்கடி கொலைகள் விழுந்தன. கூலிப்படைகளாகவும் செயல்பட்டனர்.ஐந்தாண்டுகளுக்கு முன், சின்னக்கடைத் தெருவில் ரவுடிகள் சுருளி, நீலகண்டன் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். பின், போலீஸ் கெடுபிடி அதிகரித்ததால், ரவுடிகள் வெளியூரில் கைவரிசை காட்டினர். அவ்வப்போது மதுரை வந்து "தொழில்' செய்துவிட்டு மீண்டும் வெளியூருக்கு தப்பி சென்றனர். இந்த வகையில், மதுரை கேபிள் "டிவி' அலுவலகத்தில் உரிமையாளர் காந்தி, கரிமேட்டில் "கராத்தே' பாண்டியராஜன் ஆகியோர் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டனர்.

இவர்களுக்கும், நெல்லை ரவுடிகளுக்கு இடையே தொடர்பு அதிகம். மதுரை "ஆட்டோ' பாஸ்கர், நெல்லை வேல்துரை ஆகியோர் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவை கொலை செய்தனர். இரு ஆண்டுகளுக்கு முன், கொலை வழக்கு ஒன்றில் ஜாமீன் கையெழுத்திட நெல்லையைச் சேர்ந்த சிலர் மதுரை வந்தனர். அவர்களை கொலை செய்ய கூலிப்படையினர் திட்டமிட்டு, ரிங் ரோட்டில் கூஜா வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தனர். அதேபோல் தல்லாகுளம் ஸ்டேஷனில் கையெழுத்திட வந்த நெல்லையைச் சேர்ந்த 2 பேரை, ஸ்டேஷன் அருகிலேயே கும்பல் வெட்டி கொலை செய்தது. தூத்துக்குடி அருகே பசுபதி பாண்டியனின் மனைவி ஜெசிந்தா, குண்டு வீசி கொலை செய்யப்பட்டார். சில சமயம் கூலிப்படையினர் கொள்ளைகளிலும் ஈடுபடுகின்றனர். மதுரை "ஆட்டோ' பாஸ்கர் தலைமையிலான குழு, கோவை நகைக் கடையில் கொள்ளையடித்தது. எல்லீஸ்நகர் "டாக்' ரவி, வழிப்பறி வழக்குகளில் சிக்கியவர். ஊர் பெயரை கொண்ட ரவுடி ஒருவர், காரில் "லிப்ட்' கேட்டு பயணிப்பது போல் டிரைவரை கொலை செய்து, காரை திருடி விற்பது வழக்கம். இவரும், நிதிநிறுவன உரிமையாளர் கொலையில் கூலிப்படையாக செயல்பட்டவர். இந்நிலையில், உள்ளூர் போலீசார் தங்களை பற்றி அறிந்து வைத்திருப்பதால், வெளியூர்களில் "கைவரிசை' காட்டி வருகின்றனர். சேலத்தில் முன்னாள் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் உட்பட ஆறு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை கூலிப்படையினருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உள்ளனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது :"டாக்' ரவி, ஒத்தக்கடை கணேசன், சவுந்தர், ராஜா, மீரான் போன்ற ரவுடிகளின் கீழ் இன்றும் கூலிப்படை செயல்படுகிறது. தொழில் போட்டி, அரசியல் பகை போன்ற காரணங்களால் தென் மாவட்டங்களில் நடக்கும் கொலைகளில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது. பெத்தானியாபுரம், காமராஜர்புரம், ஜெய்ஹிந்துபுரம் பகுதிகளில் இன்றும் கூட்டாளிகள் வசிக்கின்றனர். அடிக்கடி தங்கியிருக்கும் இடங்களை மாற்றுகின்றனர். இவர்களை கட்டுப்படுத்துவதற்காகவே தற்போது ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு நடவடிக்கை குழு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment