Saturday, November 13, 2010

போலீஸ் ஸ்டேஷன் எல்லை பிரச்னை: 2 நாளாக கேட்பாரற்று கிடக்கும் உடல்


நெல்லிக்குப்பம் அருகே ஆற்றில் மூழ்கி இறந்தவரின் உடல், போலீஸ் ஸ்டேஷன் எல்லைப் பிரச்னையால், இரண்டு நாட்களாக துர்நாற்றம் வீசி கேட்பாரற்று கிடக்கிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் வான்பாக்கம் பெண்ணையாற்றில், கடந்த 11ம் தேதி இரவு தண்ணீரில் மூழ்கி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்தார். வி.ஏ.ஓ., நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார், அப்பகுதி தங்கள் எல்லைக்குட்பட்டதல்ல; விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்டது என, அவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களோ, "எங்கள் பகுதி எல்லையல்ல; கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் தான் உள்ளது' எனக் கூறி, தட்டிக் கழித்தனர். இரண்டு மாவட்ட போலீசார் எல்லைப் பிரச்னையால், இறந்தவரின் உடல் இரண்டு நாட்களாக ஆற்றங்கரையோரம் கிடக்கிறது.

உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியே செல்பவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இரண்டு போலீஸ் ஸ்டேஷனில் ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷன் எல்லையை பார்க்காமல் நாய், கழுகு, காக்கைகள் உடலை கொத்தி தின்பதற்குள், மனிதாபிமானத்தோடு உடலை அப்புறப்படுத்தி வழக்கு பதிந்து விசாரணை செய்ய வேண்டும். பிறகு எல்லையை முடிவு செய்து, அந்த போலீஸ் நிலையத்துக்கு வழக்கை மாறுதல் செய்து கொள்ளலாம். எல்லையை பார்க்காமல் வழக்கு பதிய வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டும், போலீசாருக்கு மட்டும் எல்லை பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை.

No comments:

Post a Comment