Tuesday, October 12, 2010

தூய வளனார் கல்லூரி முதல்வர் மீது கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார்

திருச்சியில், புகழ்பெற்ற தூய வளனார் கல்லூரி முதல்வர் மீது, கன்னியாஸ்திரி ஒருவர் கொடுத்த கற்பழிப்பு புகாரை தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில், மிகவும் பழமையான, புகழ்பெற்ற தூய வளனார் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் முதல்வராக ராஜரத்தினம் உள்ளார். இவர் மீது, அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி (28), நேற்று முன்தினம் இரவு, கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார்.


புகார் மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 2006ம் ஆண்டு முதல், திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில், இசையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தேன். தூய வளனார் கல்லூரியின் முதல்வர் ராஜரத்தினம், அந்த கல்லூரிக்கு அடிக்கடி வந்தபோது, எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பழக்கத்தின் அடிப்படையில் 2006 ஜன., 22ம் தேதி, ராஜரத்தினத்தை தனியாக சந்தித்தபோது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னை கெடுத்து விட்டார்.அதை மொபைல் போனிலும் படம் எடுத்து தொடர்ந்து என்னை மிரட்டி, பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார். இதனால், 2008ம் ஆண்டு நான் கர்ப்பமடைந்தேன்.


இதுகுறித்து பாதிரியார் ராஜரத்தினத்திடம் தெரிவித்தபோது, என்னை சமாதானப்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்தார்.இத்தகவல் நான் சார்ந்த சபைக்கு தெரிந்தவுடன், என்னை சபையிலிருந்து அவர்கள் நீக்கிவிட்டனர். இதையடுத்து, பாதிரியார் ராஜரத்தினத்தை சந்தித்து நியாயம் கேட்டதற்கு, "இனிமேல் என்னை பார்க்கக் கூடாது; இதுதொடர்பாக யாரிடமும் பேசக் கூடாது' என மிரட்டினார்.
அவருக்கு ஆதரவாக பாதிரியார்கள் தேவதாஸ், சேவியர் பிரான்சிஸ், சேவியர் ஆகியோரும் சேர்ந்து, என்னை மிரட்டினர்.


இதுகுறித்து பாதிரியார் சார்ந்த சபையில் புகார் தெரிவித்தும், நியாயம் கிடைக்கவில்லை.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கோட்டை மகளிர் போலீசார், தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது, கற்பழிப்பு மற்றும் மிரட்டல் ஆகிய இருபிரிவுகளிலும், அவருக்கு துணையாக இருந்த மூன்று பாதிரியார்கள் மீது மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்தனர்.


இந்நிலையில், "கற்பழிப்பு புகார் கூறப்பட்டுள்ள தூய வளனார் கல்லூரி முதல்வர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். இவருக்கு, அவர் சார்ந்த சபையில் முக்கிய பதவி உயர்வு, விரைவில் வரவுள்ளது. அப்பதவிக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் வரக்கூடாது என்பதற்காக, கல்லூரியிலேயே மெஜாரிட்டியாக இருக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து செய்யும் சதி' என, முதல்வர் ராஜரத்தினம் தரப்பினர் கூறி வருகின்றனர். பல முக்கிய பிரபலங்கள் படித்த கல்லூரியின் முதல்வர் மீது கற்பழிப்பு புகார் எழுந்து, போலீசார் வழக்கு பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment