சுதந்திர இந்திய அரசியல் சரித்திரத்தில், எதிர்க்கட்சிகளால் பிரதமர்கள் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை மன்மோகன் சிங்கைப்போல எந்தப் பிரதமரும் உச்ச நீதிமன்றத்தால் செயல்திறன் கேள்வி கேட்கப்பட்டு அவமானப்பட்டதாகத் தெரியவில்லை. கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்று கருதப்பட்டவர் கறுப்பு ஆடுகளின் காவல்காரர் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
"ஸ்பெக்ட்ரம்' ஊழல் ஒருபுறம் இருக்கட்டும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்தேறியிருக்கும் முறைகேடுகளும், ஊழல்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இந்த ஊழல்களிலும், முறைகேடுகளிலும் தொடர்புடையவர்கள் பலரும் பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவும், அவரால் தேர்ந்து எடுத்து நியமிக்கப்பட்டவர்களுமாக இருக்கிறார்களே அதுதான் நம்மை எல்லாம் வியப்படையச் செய்கிறது.
இந்திய அரசுப் பணி அதிகாரியாகவும் தலைமைத் தேர்தல் ஆணையராகவும் இருந்த எம்.எஸ். கில், உணவு மற்றும் விவசாயப் பிரச்னைகளில் தேர்ந்தவர் என்று கருதப்படுபவர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடும் நேரத்தில், அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யர் மாற்றப்பட்டு, அந்தத் துறைக்குச் சம்பந்தமே இல்லாத எம்.எஸ்.கில் விளையாட்டுத் துறை அமைச்சராக்கப்பட்டது ஏன் என்கிற சந்தேகம் அப்போது ஏற்படவில்லை. இப்போது ஏற்படுகிறது.
எம்மார் எம்.ஜி.எஃப் என்றொரு நிறுவனம். இந்த நிறுவனத்திற்குத்தான் தில்லி வளர்ச்சிக் குழுமம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட சர்வதேச அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை அளித்தது. இந்த நிறுவனம் முன்னாள் ராஜஸ்தான் ஆளுநர் எஸ்.கே.சிங்கின் மகனும், ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகருமான கனிஷ்க் சிங்கின் குடும்பத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. கடைசி நேரத்தில், உடனடியாகக் கட்டி முடிப்பதற்காக, இந்த நிறுவனத்துககு முறையே | 750 கோடியும், | 827 கோடியும் முன்பணமாக, ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத் தொகைக்கும் அதிகமாக அளிக்கப்பட்டிருக்கிறதே, அது ஏன்? எதற்காக? யாருடைய பரிந்துரையில் அல்லது நிர்பந்தத்தின் பேரில்?
பல்ஜித்சிங் லல்லி என்பவர், எம்.எஸ். கில்லைப் போலவே பஞ்சாபியரான இன்னொரு இந்திய அரசுப்பணி அதிகாரி. மத்திய உள்துறையின் செயலர்களில் ஒருவராக இருந்த பல்ஜித்சிங் லல்லி, பிரதமர் மன்மோகன் சிங்கின் குடும்ப நண்பர். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியும் பிரதமருக்கு நெருக்கமானவர் என்பதால் எதிலும் சிக்கிக் கொள்ளாதவர். இவர் பிரசார் பாரதி குழுமத்தின் செயல் தலைவராக நியமிக்கப்படுகிறார். இவரது நேரடிப் பார்வையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பெயரில் பிரசார் பாரதி சார்பில் நடந்தேறியிருக்கும் ஊழல், தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.
பிரசார் பாரதி குழுமம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஒலிபரப்பவும், ஒளிபரப்பவுமான உரிமையை லண்டனைச் சேர்ந்த எஸ்.ஐ.எஸ்.லைவ் என்கிற நிறுவனத்துக்கு | 246 கோடிக்கு வழங்கியது. இந்த ஒப்பந்தப்படி உரிமையை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுப்பதற்கோ அல்லது துணை ஒப்பந்தம் மூலம் வேறு நிறுவனத்தைப் பயன்படுத்தவோ எஸ்.ஐ.எஸ்.லைவ் நிறுவனத்துக்கு அனுமதி கிடையாது.
ஆனால் நடந்தேறியிருப்பது என்ன தெரியுமா? எஸ்.ஐ.எஸ்.லைவ் நிறுவனம் மார்ச் 5, 2010 அன்று பிரசார் பாரதியால் | 246 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அதே நாளில், "ஜும்' என்கிற நிறுவனத்தை | 177.30 கோடிக்கு காமன்வெல்த் போட்டிகளை ஒலிபரப்பவும், ஒளிபரப்பவும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இடைத்தரகராகச் செயல்பட்டு | 68.70 கோடி லாபம் சம்பாதித்துவிட்டது எஸ்.ஐ.எஸ்.லைவ். பிரசார் பாரதிக்கு மட்டுமல்ல, இந்திய அரசுக்கும் சேர்த்து "ஜும்' காட்டிவிட்டனர். இதன் பின்னணியில் செயல்பட்டவர் வேறு யாருமல்ல, பிரசார் பாரதியின் செயல் தலைவர் பல்ஜித்சிங் லல்லிதான்.
மத்திய நிதியமைச்சகம், எஸ்.ஐ.எஸ்.லைவ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிப்பதை ஆரம்பத்திலேயே எதிர்த்திருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு முறையான பின்னணியோ, சேவை வரி செலுத்திய பதிவு எண்ணோ, முன்அனுபவமோ இல்லை என்று சுட்டிக்காட்டி இருக்கிறது. ஒப்பந்தங்கள் பெறப்பட்டு நான்கு மாதங்கள் கழிந்த பிறகுதான், 2010 ஜனவரி மாதத்தில் எஸ்.ஐ.எஸ். லைவ் என்கிற நிறுவனமே தொடங்கப்பட்டிருக்கிறது என்று கூறி நிதியமைச்சகம் பிரசார் பாரதியை எச்சரித்திருக்கிறது. இதையெல்லாம் மீறி, அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மட்டுமல்லாமல், அவசர அவசரமாக ஒப்பந்தத் தொகையான | 246 கோடியில் 80% உடனடியாக அந்த நிறுவனத்துக்கு முன்பணமாக வழங்கவும் செய்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பல்ஜித்சிங் லல்லி!
ஒன்றன்பின் ஒன்றாகப் பார்த்தால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலிலும், முறைகேடுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே ஏதாவது ஒருவகையில் பிரதமர் மன்மோகன் சிங்குடனோ அல்லது காங்கிரஸ் கட்சித் தலைமையுடனோ நெருக்கமாக இருப்பவர்களாக இருக்கிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங், விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, தில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் என்று எல்லோருமே இந்த "மெகா' கொள்ளையில் தொடர்புடையவர்களாக இருப்பதால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் கமிட்டித் தலைவர் சுரேஷ் கல்மாடி பலிகடா ஆக்கப்பட்டு, பிரச்னையை மூடிமறைக்கும் முயற்சி நடக்கிறதோ என்று தோன்றுகிறது.
பிரதமர் ஏன் இத்தனை நாளாக மௌனம் சாதித்தார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. அவரால் பதில் சொல்ல முடியாததுதான் காரணம் என்று நம்ப வழியில்லை. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று சொல்வார்கள். அவருக்குத் தெரியாமல் இதெல்லாம் நடந்திருக்கக் கூடுமா என்ன?
சமீபத்தில் பதவி விலகி இருக்கும் முன்னாள் மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவின் கூற்றுப்படி - ""பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாமே நடந்தது!''
No comments:
Post a Comment