ஊரெல்லாம் இதே பேச்சுதான். "ஸ்பெக்ட்ரம்' என்கிறார்கள் சிலர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு என்கிறார்கள் வேறு பலர். எப்படி அழைத்தால்தான் என்ன, ஒட்டுமொத்த இந்தியாவையே சூறாவளியாகச் சுற்றியடிக்கும் விஷயம் எது என்று கேட்டால் "2ஜி'யாகத்தான் இருக்கும்.
கூகுள் இணையதளத்தில் 2ஜி என உள்ளிட்டுத் தேடினால், நொடிக்கும் குறைவான நேரத்தில் கோடிக்கணக்கான தகவல்கள் வந்து கொட்டுகின்றன. கூகுளில் இந்தி நடிகர் ஷாருக்கானை விடவும் 2ஜி 29 மடங்கு பிரபலம்; ரஜினிகாந்தை விட 17 மடங்கு! 2ஜி எந்த அளவுக்குப் பிரபலமோ அந்த அளவுக்கு ஊழலிலும் 2ஜியை விஞ்ச எதுவும் இல்லை போலிருக்கிறதே. 1.76 லட்சம் கோடி என்கிற பெரிய தொகையை எண்ணில் எழுதிக் கூட்டிப் பாருங்கள். தலைசுற்றும்.
இப்படி மலைப்பை ஏற்படுத்தும் விஷயத்தைப் பற்றித்தான் பிரதமரிடம் நாடு கேட்கிறது; "ஐயா 2ஜி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?' என்று.
ஊஹூம்... பிரதமர் அசைந்து கொடுப்பதாக இல்லை. இங்கே மின்னஞ்சலிலும் எஸ்எம்எஸ்ஸிலும் பரபரப்பான விவாதமாகிக் கொண்டிருக்கும் ஒரு விவகாரம் பற்றி பிரதமர் மெüனம் சாதிக்கிறார். ஒரு வழியாக தனது மெüனத்தைக் கலைத்து அவர் ஏதாவது கருத்துத் தெரிவிக்கிறார் என்றால் என்னதான் சொல்வார்? எனக்குத் தெரிந்த 2ஜி என்பது சோனியாஜியும் ராகுல்ஜியும்தான் என்று சொன்னால்கூட வியப்பில்லை.
இதைவிட வேதனையான இன்னொரு விஷயம் இருக்கிறது. அதை நினைத்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
மன்மோகன் சிங் நூறு விழுக்காடு நேர்மையானவர் என்று கடந்த 24-ம் தேதி அவருக்கு "அக்மார்க்' சான்றிதழ் வழங்கியிருப்பது யார் தெரியுமா? சோனியா காந்திதான், வேறு யார்? அத்தோடு விட்டாரா என்றால் அதுதான் இல்லை. "நான் ஊழலைப் பொறுக்காதவள்' என்று ஒரு அண்டப்புளுகையையும் அடுத்த நாளே அவிழ்த்துவிட்டார்.
என்ன கொடுமை? சோனியாவிடம் இருந்து மன்மோகனுக்கு நற்சான்று. இதைவிடப் பிரதமரை இழிவுபடுத்தும் வேறொரு செயல் இருக்க முடியுமா என்று யாரும் அதிர்ச்சி அடையாதீர்கள். இது எதிர்பார்த்ததுதான்.
5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கதை இருக்கிறது. சோனியாவின் இத்தாலிய நண்பர் ஒட்டாவியோ குவாத்ரோச்சியை (மிஸ்டர் க்யூ) மன்மோகன் காப்பாற்றிய கதை அது.
இங்குள்ள சிபிஐ போல ஸ்வீடனில் தேசிய புலனாய்வு அமைப்பு ஒன்று இருக்கிறது. ஸ்டென் லின்ட்ஸ்டோர்ம் என்பவர் அதன் தலைவராக இருந்தார். அவர்தான் போஃபர்ஸ் ஊழல் குறித்து விசாரித்தவர்.
6.4.1998 அவுட்லுக் இதழில் வெளியான அவரது பேட்டியில்,போஃபர்ஸிடம் இருந்து மிஸ்டர் க்யூவின் நிறுவனங்கள் பெருந்தொகையைப் பெற்றது எப்படி என சோனியா விளக்க வேண்டும் என்று கூறியிருந்தார். யாரோ ஒருவர் பணம் பெற்றது பற்றி சோனியா ஏன் விளக்கமளிக்க வேண்டும்? என்றுதானே கேட்கிறீர்கள்! காரணம் இருக்கிறது. போஃபர்ஸýக்கு மிஸ்டர் க்யூவை அறிமுகப்படுத்தியவரே சோனியா காந்திதானே!
6 ஆண்டுகளுக்குப் பிறகு 8.4.2004-ல் "போஃபர்ஸ் ஊழல் பற்றி சோனியாவிடம் விசாரணை நடத்த வேண்டும்" என்று லின்ட்ஸ்டோர்ம் மீண்டும் எழுதினார். அதற்கு அனுமதி வழங்காமல் காப்பாற்றியவர் இப்போது சோனியா காந்தியால் அப்பழுக்கற்றவர் என்று நற்சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் திருவாளர் மன்மோகன் சிங்தான். சோனியாவின் சர்ட்டிபிகேட்டுக்குக் காரணம் இப்போது புரிகிறதா?
இந்த ஊழலில் கமிஷன் கொடுத்த போஃபர்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் மார்ட்டின் ஆட்போ தனது நாள்குறிப்பில், "காந்தி டிரஸ்ட் வழக்கறிஞரை' தாம் சந்தித்தது பற்றி எழுதியிருக்கிறார். போஃபர்ஸ் ஊழலில் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் மிகப்பெரிய ஆவணம் இது.
இந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மிஸ்டர் க்யூ இறுதியாக இந்தியாவுக்கு வந்தபோது, ஒரு திருடனைப் போல்தான் நடந்து கொண்டார். அவர் மீதான புகார்களுக்கு ஆதாரங்கள் கிடைத்த நிலையில், 1993-ம் ஆண்டு நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார். அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவுக்கு, சோனியா கொடுத்த நெருக்கடிதான் இதற்குக் காரணம் என்பது உலகறிந்த ரகசியம்.
1999-ல் மிஸ்டர் க்யூவுக்கு சோனியா வெளிப்படையாக ஆதரவளித்தார். க்யூ ஒரு அப்பாவி; அவர்மீது வேண்டுமென்றே பாஜக அரசு பழிபோடுகிறது என்றார். பத்தாண்டுகள் கழித்து க்யூவை தொந்தரவு செய்ததற்காக மன்மோகன் அரசு சோனியாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது. போஃபர்ஸ் ஊழலின் முக்கியக் குற்றவாளியான க்யூவை ஒவ்வொரு கட்டத்திலும் சோனியா தொடர்ந்து காப்பாற்றினார். சட்டச் சிக்கல்களிலிருந்து க்யூ தப்புவதற்கு மன்மோகன் அனுமதித்தார்.
இப்படிப் பலவகையிலும் போஃபர்ஸ் ஊழலில் சந்தேக நிழல் படிந்த சோனியா, இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்; தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவர். அவர் சொல்கிறார் ஊழலை நான் பொறுப்பதில்லை என்று. மன்மோகனுக்கு நற்சான்று வேறு. இது இரட்டைச் சோகம் இல்லையா?
எதற்காக இந்த போஃபர்ஸ் பின்னணி எல்லாம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்தப் பின்னணியை மனதில் வைத்துக் கொண்டு மேலே படியுங்கள் புரியும்.
கடந்த சில மாதங்களில் ஊழல்களின் சுனாமி நம்மைப் பலமுறை தாக்கியிருக்கிறது. அதில் முதலாவது 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் 1.76 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்தான். சோனியாவால் திருவாளர் பரிசுத்தம் என சான்றளிக்கப்பட்ட மன்மோகன் சிங்தான் இந்தக் கொள்ளைக்கு அனுமதியளித்தவர். 2ஜி ஊழல் குறித்து விசாரணை கோரிய சுப்பிரமணியன்சுவாமியின் மனுவை கோப்பில் தூங்க வைத்த "திருவாளர் பரிசுத்தம்', இப்போது அதுபற்றிய சட்டப் பிரச்னைகளைப் பேசி, சட்டத்தின் பிடியிலிருந்தும், தனது தார்மிகக் கடமையிலிருந்தும் ஓடி ஒளிந்துகொள்ள முயற்சிக்கிறார்.
ராசாவை தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சராக்கும் விவகாரம் தொடர்பாக நீரா ராடியாவுடன் அரசியல் வாதிகள் மட்டுமல்லாமல், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பேசிய உரையாடல்கள் வெளியே கசிந்திருக்கிறது. 8 ஆயிரம் கோடி மோசடி நடந்திருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல். 600 கோடி ஊழல் நடந்த மும்பை ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல். இப்படி ஊழல் சுனாமிகள் இந்தியாவை விழுங்கிவிடும் ஆபத்தான நிலைமை.
இவை அனைத்தையும் சேர்த்தால் சுமார் 1.85 லட்சம் கோடி வருகிறது. நமது நாட்டின் மொத்த பட்ஜெட்டில் இது 18.5 சதவீதம். இவ்வளவு பெரிய ஊழலுக்கு இடையே எடியூரப்பாவின் நில ஒதுக்கீடு ஊழல் காங்கிரஸýக்குக் கிடைத்த ஆறுதல். நீ மட்டும் என்ன ஒழுங்காம் என்று திருப்பிக் கேள்வி கேட்கக் கிடைத்த வாய்ப்பு. காங்கிரஸ் கட்சி சம்பந்தப்பட்ட 1.86 லட்சம் கோடி ஊழலுடன் ஒப்பிட்டால் அது வெறும் கொசுறுதான் என்றாலும், ஊழலை எதிர்த்துக் கேள்வி கேட்கும் தார்மிக உரிமையை பாரதிய ஜனதா கட்சி இழந்துவிட்டது. அதை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறது.
நாம் முன்னே குறிப்பிட்ட முறைகேடுகளின் பட்டியலில் உள்ளவை 2ஜி ஊழல் தொடர்பானது. இந்த ஊழலில் நாட்டுக்கு 67 ஆயிரம் கோடியிலிருந்து
1.76 லட்சம் கோடிவரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தலைமைத் தணிக்கைக் கணக்கு அதிகாரி (சிஏஜி) தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதும் அரசுக்குப் பேரிழப்பு என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அது எப்படிப்பட்ட ஊழல் என்பது தெரியும்போதுதான் தலைசுற்றல் ஏற்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் என்று அழைக்கப்படும் அலைக்கற்றை என்பது ஒருவகையான மின்காந்த அலையைக் குறிப்பது. செல்போனில் பேசுவதற்கும், எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும், கணினிகளை இணைப்பதற்கும் ஸ்பெக்ட்ரம் பயன்படுகிறது. இது நாட்டின் சொத்து.
2001-ல் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 2008-ம் ஆண்டு இதை விற்பனை செய்து நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தியதுடன் ஒரு சிலர் லாபம் ஈட்டியதுதான் இந்த மோசடியின் பின்னணி.
2001-க்கும் 2008-க்கும் இடைப்பட்ட 8 ஆண்டுகளின் பணவீக்க வேறுபாடு மட்டுமே இழப்பு அல்ல. நகருக்கு நடுவே 2001-ம் ஆண்டு வாங்கிய நிலத்தை, அதே விலைக்கு 2008-ம் ஆண்டில் விற்பதைப் போன்றதுதான் அன்றைய முறையைப் பின்பற்றி அதே விலை நிர்ணயத்தில் இப்போது அலைக்கற்றை ஒதுக்கீட்டைச் செய்திருப்பது.
2008-ம் ஆண்டில் மட்டுமே பங்குச் சந்தையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் 20 மடங்கு உயர்ந்தன என்றால் 8 ஆண்டுகளில் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கும் எனக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
தனது செயலை நியாயப்படுத்தும் ஆ.ராசா, 2001-ம் ஆண்டின் விலையிலேயே 2003 ஆண்டில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததைச் சுட்டிக் காட்டுகிறார். அதாவது தனது செயலை நியாயப்படுத்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசா முன்வைக்கும் நொண்டி வாதம் இது.
2003-ம் ஆண்டில் இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 5 பேர்தான் செல்போன் வைத்திருந்தார்கள். மொத்தமே தொலைபேசி வைத்திருந்த இந்தியர்கள் 1.3 கோடி பேர்தான். 2006-ம் ஆண்டு வரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் பெரும் நஷ்டத்தையே சந்தித்து வந்தன. அரசு உதவிக்கு ஏங்கிக் கிடந்தன.
ஆனால், 2003-க்கும் 2008-க்கும் இடையே நிலைமை மாறியது. தொலைபேசி வைத்திருப்போரின் எண்ணிக்கை 14 மடங்கு உயர்ந்தது. தொலைத்தொடர்பு வருவாய் 4 மடங்கு அதிகமானது. அந்தத் துறையின் பங்குகள் 4.4 மடங்கு உயர்ந்தன.
2001-ல் செல்போன் வைத்திருந்தோரின் எண்ணிக்கை வெறும் 30 லட்சம்தான். அது 2003-ல் 1.3 கோடியானது. 2008-ம் ஆண்டில் அதுவே 18 கோடியானது. இப்போது 68.8கோடி. 2003-ம் ஆண்டைக் காட்டிலும் 53 சதவீதம் அதிகம். 2003-ம் ஆண்டில் 48 ஆயிரம் கோடியாக இருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய், 2008-ம் ஆண்டில் 1.69 லட்சம் கோடியானது.
தொலைத்தொடர்புத் துறை எந்த அளவுக்கு வளமானதாக மாறியிருக்கிறது என்பதையும், அந்தத் துறையில் தொழில் செய்யும் நிறுவனங்கள் எந்த அளவுக்கு லாபம் பெறுகின்றன என்பதையும் இந்தப் புள்ளிவிவரங்களின் மூலம் புரிந்து கொள்ள முடியும். அதனால், 2008-ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் என்பது 2003-ம் ஆண்டைக் காட்டிலும் பலமடங்கு மதிப்புடையதாக மாறியிருக்கும்; அதைப் பெறுவதில் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி இருந்திருக்கும் என்பதைச் சொல்லியா தெரியவேண்டும்?
]இந்தியாவில் செல்போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டில் 99.3 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறதென்றால், ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு பற்றி வேறென்ன சொல்ல?
2007 செப்டம்பரில் புதிய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமம் குறித்த கொள்கையை அறிவித்தார் அன்றைய அமைச்சராக இருந்த ஆ. ராசா. இது தொடர்பாக விண்ணப்பிக்கக் கடைசித் தேதி அக்டோபர் 1 என செப்டம்பர் 24-ம் தேதி அறிவித்தார். ஆனால் அவரே ஒருவாரம் கழித்து, செப்டம்பர் 25-ம் தேதிக்குப் பிறகு வந்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று இன்னொரு அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டார்.
அதாவது ஒரே நாள் அவகாசத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்று பொருள். எப்படி இருக்கிறது கதை? அப்படியும், பலர் விண்ணப்பித்திருப்பதால், தனக்கு வேண்டப்பட்டவர்களைத் தவிர ஏனையோரைத் தட்டிக் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.
அதன் பிறகு 100 நாள்கள் கழித்து ஜனவரி 10-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு அவரிடம் இருந்து இன்னொரு திடீர் அறிவிப்பு பறந்தது. ஸ்பெக்ட்ரம் உரிமம் தொடர்பாக செப்டம்பர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தங்களது பிரதிநிதிகளை உடனடியாக அன்றையதினமே மதியம் 3.30-க்குள் அனுப்பி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான அரசின் ஒப்புதலைப் பெற்று, அன்று மாலைக்குள் உரிய தொகையைச் செலுத்த வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு. எப்படி இருக்கிறது பாருங்கள், ஆ. ராசாவின் முறையான ஒதுக்கீட்டுக் கொள்கை. இதற்குப் பெயர்தான் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பதாம்.
இந்த அறிவிப்பையடுத்து தில்லி தொலைத்தொடர்பு அமைச்சக அலுவலகத்தில் ஒரே தள்ளுமுள்ளு. வரிசையில் முதலில் வருவதற்குக் கடும் போட்டி. இருக்காதா பின்னே? முதலில் வரும் சிலருக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்றால் நிறுவனங்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடி வராமல் இருக்குமா?
மொத்தம் வந்த 574 விண்ணப்பங்களில் 454 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏன் நிராகரிக்கப்பட்டது என்று தெரியாமல் பல விண்ணப்பதாரர்கள் திகைத்தனர். உண்மையில் என்ன நடந்தது என்பது தேர்வான விண்ணப்பதாரர்களுக்கு மட்டும்தானே தெரியும்?
இதுபற்றிய சிஏஜி அறிக்கை தெளிவாக நடந்தேறிய நாடகத்தைப் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டது. "13 விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய நாள்களில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலையுடன் தயாராக இருந்தனர்' என்று குறிப்பிடுகிறது அந்த அறிக்கை. அதாவது அந்த 13 பேருக்கும் முன்பே தகவல் தெரிந்திருக்கிறது!
ஒரு ரூபாயா, இரண்டு ரூபாயா! பல கோடிக்கான வங்கி வரைவோலையுடனும், வங்கி உத்தரவாதத்துடனும், தேவையான ஆவணங்களோடும் ஒரு சில நிறுவனங்கள் தயாராக வந்திருந்தன என்றால் அது எப்படி சாத்தியம்? காசோலையை மாற்றுவதற்கே அரைநாள் வேண்டும் என்கிற நிலைமையில் இவர்கள் முன்தேதியிட்ட வங்கி வரைவோலைகளுடன் தயாராக வந்திருந்தார்கள் என்றால் எல்லாமே முன்கூட்டியே திட்டமிட்ட சதியல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?
உண்மையில் பல மாதங்களுக்கு முன்பே விவகாரம் தொடங்கிவிட்டது. ஆ.ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறையை நிராகரித்த பிரதமர், வெளிப்படையாக நடந்துகொள்ளும்படி 2007 நவம்பரில் வலியுறுத்தி இருக்கிறார். சில மணி நேரங்களிலேயே அதற்குப் பதிலளித்த ராசா, முந்தைய அரசுகளின் கொள்கைப்படியே தாம் நடந்து கொள்வதாகப் பதிலளிக்கிறார்.
இந்தக் கடிதத்துக்குப் பதிலளிக்க ஒருமாத அவகாசம் எடுத்துக் கொண்ட பிரதமர், தான் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக மட்டும் தகவல் அனுப்பினார். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என ராசாவுக்கு அனுமதியளிப்பது போன்றதுதானே இது?
ஜனவரி 10-ம் தேதி ஆ.ராசா தனது மோசடித் திட்டத்தை அரங்கேற்றினார். ஆனால் கதை இத்துடன் முடிந்துவிடவில்லை.
ஏற்கெனவே இருக்கும் கொள்கையையே தாம் பின்பற்றுவதாக ராசா தம்மிடம் தெரிவித்தார் என்று 15 மாதம் கழித்து 24.05.2010-ல் பிரதமர் ஒப்புக் கொள்கிறார். வெளிப்படையாக நடந்து கொள்ளச் சொன்ன பிரதமரின் தடாலடி பல்டிக்கு என்ன காரணம்? இந்தக் கொள்ளை ரகசியமானது அல்ல; எல்லோருக்கும் தெரிந்தே நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள நாம் அகராதியைப் புரட்ட வேண்டியதில்லை.
இந்தப் பகல் கொள்ளையில் பெரிய கூட்டுச் சதி இருக்கிறது. ராசாவை மட்டுமல்ல, முதலில் ஏனய்யா மறுப்புத் தெரிவித்தீர்கள்? பிறகு ஏன் மெüனமானீர்கள், கடைசியாக ஏன் ஆதரவளிக்கிறீர்கள் என்று பிரதமரையும் அல்லவா கேட்க வேண்டும்!
2ஜி ஊழல் தொடர்பான முறைகேடுகள் மூன்று வழிகளில் கசியத் தொடங்கின. முதலாவது வழி எஸ்டெல் வழக்கு. அனைத்திந்திய உரிமம் பெறுவதற்காக முயன்ற எஸ்டெல் நிறுவனம், உரிமங்கள் வழங்கப்படுவதற்கு முன்பே ராசாவுக்கு ஒரு கோரிக்கை வைத்தது. 1,658 கோடிக்கு விற்பனையாகும் உரிமத்தைத் தங்களுக்கு 13,621 கோடிக்குத் தரும்படி அந்த நிறுவனம் கேட்டது. ஆனால், இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தில்லி உயர் நீதிமன்றத்தில் எஸ்டெல் முறையிட்டது. அந்த நிறுவனத்தின் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
உடனே ராசாவின் அமைச்சகம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. இந்தச் சமயத்தில் என்ன நடந்ததோ, எஸ்டெல் நிறுவனம் தங்கள் மனுவை விலக்கிக் கொண்டு, வழக்கிலிருந்து ஒதுங்கியது. ஆனால், ஊழல் விவகாரம் வெளிவர இந்த வழக்கு உதவியது. எஸ்டெல் வழங்க முன்வந்த தொகையின் அடிப்படையில்தான் 67,300 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இரண்டாவது, யூனிடெக் மற்றும் ஸ்வான் நிறுவனங்கள். தொலைத் தொடர்புத் துறைக்கு மிகவும் புதியவைகளான இந்த நிறுவனங்களுக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த இரு நிறுவனங்களும் 2ஜி உரிமம் பெற்ற சில வாரங்களில் தங்களது நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை பல மடங்கு லாபத்தில் விற்றன.
1,658 கோடிக்கு உரிமம் பெற்ற யூனிடெக், தனது 67 சதவீதப் பங்குகளை 6,120 கோடிக்கு விற்றது. அதாவது உரிமத்தின் மொத்த மதிப்பு 9,100 கோடி இதேபோல், 1,537 கோடிக்கு உரிமம் பெற்ற ஸ்வான், தனது 44.7 சதவீதப் பங்குகளை 3,217 கோடிக்கு விற்றது. 25 கோடிக்கு சிறிய உரிமங்களைப் பெற்ற எஸ்டெல் நிறுவனம், தனது 5.61 சதவீதப் பங்குகளை 238.5 கோடிக்கு விற்றது. இதன் அடிப்படையில்தான் இழப்பு 57,600 கோடியில் இருந்து 69,300 கோடிவரை இருக்கலாம் என அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை சிஏஜி முடிவு செய்திருக்கிறார்.
மூன்றாவதாக, 3ஜி ஏலம். இந்த ஏலத்தில் அரசுக்குக் கிடைத்த வருவாயின் அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் மதிப்பு கணக்கிடப்பட்டதில் அரசுக்கு 1,76,645 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கைதான் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக வெளியாகி பரபரப்புக்குள்ளானது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்திருப்பது வெளிப்படையான மோசடி. திருவாளர் பரிசுத்தம், கறையே படியாத கரங்களுக்குச் சொந்தமானவர், நேர்மையின் மறு உருவம் என்றெல்லாம் கூறப்படும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ஊழலைப் பொறுத்துக் கொள்ளாதவர் என்று தனக்குத்தானே நற்சான்றிதழ் வழங்கிக் கொள்ளும் சோனியா காந்திக்கும் தெரிந்தேதான் இது நடந்திருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் ராசாவின் அமைச்சகத்தில் சிபிஐ சோதனை நடத்தியபோது, அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. ராசா தெளிவாகத் திருப்பிக் கேட்டார், "எல்லாவற்றையும் பிரதமருடன் ஆலோசித்துத்தான் செய்திருக்கிறேன். அவருக்குத் தெரிந்துதான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, முந்தைய ஒதுக்கீடுகளைப் போல நடந்திருக்கிறது. பிறகு, நான் ஏன் ராஜிநாமா செய்ய வேண்டும்?' என்று!
ராசாவின் கருத்தை பிரதமர் மறுக்கவில்லை. ஆனால் சில மாதங்கள் கழித்து கடந்த மே மாதம், "இந்த விவகாரம் குறித்து ராசா தம்முடன் ஆலோசனை நடத்தினார்' என்று பிரதமர் ஒப்புக்கொண்டார். பிரதமருக்குத் தெரிந்தே எல்லாம் நடந்திருக்கிறது என்பதற்கு இதைவிடத் தெளிவான வாக்குமூலம் வேறென்ன வேண்டும்?
முதலில் "நிராகரிப்பு', பின்னர் "தடை எதுவும் இல்லை', அதன் பிறகு "ஒப்புதல்' என தனது நிலையை பிரதமர் அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கிறார். இப்போது சிஏஜி அறிக்கை மூலம் மோசடிகள் அம்பலமாகியிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றம் உள்பட நாட்டில் ஒவ்வொருவரும் கேள்வி எழுப்பிய பிறகும் வாயைத் திறக்க மறுக்கிறாரே ஏன்? பிரதமருக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இல்லையா?
ராசா விஷயத்தில் நீங்கள் சற்று எச்சரிக்கையாகவே இருங்கள். அவரது அமைச்சகத்தின் செயல்பாடுகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அது உங்கள் பதவிக்கே கூட ஆபத்தாக முடியலாம் என 2007-க்கும் 2008-க்கும் இடைப்பட்ட காலத்தில் யாராவது பிரதமருக்கு உணர்த்தியிருப்பார்கள். இல்லாவிட்டால் ராசாவின் செயலை முதலில் நிராகரித்தவர், ஏற்றுக் கொள்ளாதவர், எச்சரித்தவர், பிறகு ஏன் பார்த்தும் பார்க்காமல் மெüனம் சாதித்தார்? அப்படி, பிரதமர் மன்மோகன் சிங்கின் கையையும் வாயையும் கண்களையும் கட்டிப் போடும் சக்தி ஒருவருக்குத்தான் உண்டு. அது நிச்சயமாக சோனியா காந்தியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?
கதை இன்னும் தொடர்கிறது. 2ஜி விவகாரத்தைத் தொடர்ந்து நடந்தவை மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியவை. ஒருகையில் டாடா குழுமத்தையும் மறு கையில் ரிலையன்ஸ் குழுமத்தையும் வைத்திருக்கும் நீரா ராடியா, தில்லி அரசியல் வட்டத்தில் செல்வாக்குப் படைத்தவர். 9 தொலைபேசிகள் மூலமாக 180 நாள்கள் அவர் நிகழ்த்திய உரையாடலை வருமான வரித்துறை சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்தது. சிபிஐயின் வேண்டுகோள்படி 20.11.2009-ம் தேதி நடந்த உரையாடலின் சிறு பகுதியை மட்டும் விசாரணைக்காக அது வழங்கியது. அந்தச் சிறுபகுதியே அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என பலரையும் கிழித்துப் போட்டிருக்கிறது.
ராடியாவின் 5,800 தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றில் இணையத்தில் கிடைப்பது 104. அவற்றில் 23 மட்டுமே எழுத்து வடிவமாக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தையும் தோண்டினால் இன்னும் என்னென்ன பூதங்களெல்லாம் கிளம்புமோ?
வருமானவரித்துறை சிபிஐக்கு அனுப்பிய குறிப்பில் கீழ்கண்ட விவரங்கள் தெரிய வருகின்றன. முதலாவது, ராடியாவும் ராசாவும் நெருக்கமானவர்கள். யூனிடெக், ஸ்வான், டேடாகாம் நிறுவனங்களுக்குத் தொலைத்தொடர்பு உரிமம் பெற்றுக் கொடுத்ததில் ராடியாவுக்குப் பங்குண்டு.
இரண்டாவது, தான் அனுமதி வழங்கிய தொலைத்தொடர்பு உரிமத்திலேயே ராசாவுக்குப் பங்கு உண்டு.
மூன்றாவது, ராசாவை தொலைத்தொடர்பு அமைச்சராக்குவதற்கு பர்கா தத், வீர் சாங்வி ஆகிய பத்திரிகையாளர்கள் வழியாக ராடியாவும் கனிமொழியும் முயன்றிருக்கிறார்கள்.
நான்காவது, கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டரும் ராடியாவும் நெருக்கமானவர்கள்.
ஐந்தாவது, யூனிடெக், ஸ்வான் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதில் ராடியா உதவி செய்திருக்கிறார்.
இந்த ஐந்தும் சிறு துரும்புதான். முழு விவரமும் இன்னும் வெளிவரவில்லை.
ராசாவுக்கு தொலைத்தொடர்புத்துறை கிடைப்பதை முதலில் அவரிடம் உறுதி செய்வதே ராடியாதான். தொலைபேசி உரையாடலில் அது தெளிவாகப் பதிவாகியிருக்கிறது. தயாநிதி மாறன் அமைச்சர் பதவியைப் பெறுவதற்கு நெருக்கடி கொடுப்பது பற்றிக் குறிப்பிட்டு வீர் சாங்வியுடன் ராடியா பேசும்போது, "ஸ்டாலினின் அம்மா தயாளுவிடம் ரூ.600 கோடியை தயாநிதி மாறன் கொடுத்திருப்பார்' எனக் குறிப்பிடுகிறார்கள். வெட்கமே இல்லாமல் அமைச்சர் பதவி விற்கப்பட்டிருக்கிறது. அரசியல் எவ்வளவு கீழ்த்தரமாகியிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.
2ஜி விவகாரத்தில் ராசா மட்டும் தனியொருவராகக் கொள்ளை அடித்திருக்க முடியாது. முக்கியப் பயனாளிகள் அவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். பிரதமரையே எதிர்க்கும் அளவுக்கு ராசாவுக்கோ அல்லது திமுகவுக்கோ தைரியமும் கிடையாது, திறனும் கிடையாது. திமுக வெளியேறிவிட்டால், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தினால்தான் பிரதமர் ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பதாகக் கூறப்படுவதெல்லாம் காதில் பூ சுற்றும் வேலை.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் பின்னணியில் இருப்பது யார்? அது நிச்சயமாக, கருணாநிதியோ, கனிமொழியோவாக இருக்க முடியாது. அவர்களுக்குப் பயந்து பிரதமர் மெüனம் சாதித்திருக்க முடியாது. பிரதமரை விட அதிக அதிகாரம் கொண்ட ஒருவர்தான் இந்த மோசடியை பின்னால் இருந்து நடத்தியிருக்கிறார். அவர் யாராக இருக்க முடியும் என்று சொல்லியா தெரிய வேண்டும்?
அந்த உண்மை வெளிவந்தால்தான் பிரதமரின் ஆலோசனையை ராசா மீறியது ஏன் என்பதும், பிரதமர் அவ்வப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டது ஏன் என்பதையும், இந்த மெகா மோசடியின் பின்னணிதான் என்ன என்பதையும் உலகம் தெரிந்துகொள்ளும்.
அதனால்தான் அதை வெளிக்கொணர நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அடம்பிடிக்கின்றன. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்குத்தான், பிரதமர் உள்பட யாரை வேண்டுமானாலும் கூப்பிட்டு விசாரிக்க அதிகாரம் உண்டு. அதனால்தான் கூட்டுக் குழு என்று சொன்னாலே அரசு தரப்பு பயப்படுகிறது. அதை எதிர்க்கிறது.
பிரதமர் மன்மோகன் சிங் நூறு விழுக்காடு நேர்மையானவர். சரி, சோனியா காந்தி சொல்வதை ஏற்றுக் கொள்வோம். அப்படியானால், 2ஜியின் பின்னணியில் இருக்கும் அந்த "ஜி' யார்?
No comments:
Post a Comment